போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எல்.பி.எஃப்., சிஐடியூ உள்ளிட் 6 மத்திய தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 8 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளி - கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். நேற்று, குடும்பத்துடன் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். 

நேற்று தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தை, போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.750 கோடி வழங்கப்படும் எனவும், அந்த தொகை பொங்கலுக்கு முன்பாக அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் நேற்று அறிவித்திருந்தார். மேலும், தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் பொங்கலை முன்னிட்டு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை, பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக எல்.பி.எஃப்., சிஐடியூ உள்ளிட்ட 6 மத்திய தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.