கடந்த, மே மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இரண்டாம் முறையாக பதவியேற்ற பின், ஒரு நாடாளுமன்ற கூட்டத்தொடரை மட்டுமே சந்தித்தது.
இந்நிலையில், நவம்பர், 18 ம் தேதி, குளிர்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.

இந்த கூட்டத் தொடருக்கு முன்பு  மத்திய அமைச்சரவையில் மாற்றம்  செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கடந்த, 27 ஆம் தேதி  பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை சந்தித்து இது குறித் விவாதித்தாக கூறப்படுகிறது.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார சூழ்நிலை, டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களை மையமாக வைத்து, மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

தற்போதைய பொருளாதார சூழலுடன் தொடர்புடைய நிதி, வர்த்தகம், தொழில், கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில்கள், திறன் மேம்பாடு ஆகிய துறைகள் தான், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இருக்கின்றன. இத்துறைகளில் மாற்றம் இருக்கலாம்.

டெல்லி  மாநில சட்டசபை தேர்தலை, பாஜக தலைமை கவனத்தில் கொள்வதால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். டில்லியில், ஆம் ஆத்மி கட்சி வலுவாகி வரும் நிலையில், ஹர்ஷ் வர்த்தனை, மாநில அரசியலுக்கு கொண்டுவந்து, டில்லி மாநில தலைவராகவோ அல்லது பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராகவோ அறிவிக்கும் திட்டம் உள்ளது.
நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரான ஹர்தீப்சிங் பூரியிடம், தற்போது, நான்கு துறைகள் உள்ளன. இனி, அவர் ஒரு துறைக்கு மட்டும் அமைச்சராக தொடரலாம் அல்லது அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என, கூறப்படுகிறது.

சாலை போக்குவரத்து துறை அமைச்சர், வி.கே.சிங்கிற்கு, வேறு துறைகள் அளிக்கப்படலாம். மஹாராஷ்டிரா இழுபறிக்கு தீர்வு ஏற்பட்டால், சிவசேனா சார்பில் புதிய அமைச்சர் பதவியேற்கலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இம்முறை கண்டிப்பாக அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது. 2021ல் தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது

ஏற்கனவே துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத் குமாரை அமைச்சராக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனவே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? அல்லது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்.பி.க்கு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.