மத்திய அமைச்சர்கள்  ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் நேற்று திடீரென்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து பிரதமர் மோடி விரைவில் தனது அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில்  இடம் பெற்று இருந்த அனில் மாதவ் தவே மரணம் அடைந்ததாலும் , மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு ஆகியோர் ராஜினாமா செய்ததாலும் ஏற்பட்ட காலி இடங்கள் இன்னும் நிரப்பப் படவில்லை. மேலும் சமீபத்தில் நடந்த ரெயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவும் ராஜினாமா செய்ய முன்வந்து உள்ளார்.

இதனால் பிரதமர் மோடி தனது மந்திரிசபையை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், பாஜக  தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ஜிதேந்திர சிங் போன்ற அமைச்சாகளும்  கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் நரேந்திர சிங் தோமர், பி.பி.சவுத்ரி, ஜிதேந்திர சிங், பாரதீய ஜனதா அமைப்பு செயலாளர் ராம் லால் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றதால், அமைச்சரவை  மாற்றம் குறித்தும் பேசியிருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, மனிதவள மேம்பாட்டு துறை ராஜாங்க அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே ஆகிய இருவரும் திடீரென்று நேற்று இரவு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

பிரதமர் மோடி விரைவில் மந்திரிசபையை மாற்றி அமைக்க இருப்பதால், அதற்கு வசதியாக ராஜீவ் பிரதாப் ரூடியும், மகேந்திர நாத் பாண்டேவும் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் உடல்நிலையை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் கன்சிங் குலாஸ்டே , நிர்மலா சீத்தா ராமன் உள்ளிட்ட 8 பேர் பதவி விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.