மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தோமர் எழுதிய கடிதத்திற்கு பிஜூ ஜனதா தள எம்.பி. ஒருவர் ஒடியா மொழியில் பதில் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மட்டுமன்றி , இந்தி மொழி பேசாத பல்வேறு மாநிலங்களிலும் இந்தி மொழி திணிக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ஒடிசா மாநில எம்.பி. ஒருவருக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்தியில் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு இந்தியில் எழுதப்பட்ட கடிதத்தை பெற்றவர் பிஜூ ஜனதா தள எம்.பி.யும் அ க்கட்சியின் கொறடாவுமான தத்தாகட் சத்பதி எம்.பி, ஆவார்.

இவர் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கப்படுவதாக கொதித்து எழுந்தார்.

இதையடுத்து ,இந்தியில் தனக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர் தோமருக்கு, அவர் தனது தாய் மொழியான ஒடியா மொழியில் பதில் எழுதி அனுப்பிவைத்தார்.

இந்த இரண்டு கடிதங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் , மத்திய அமைச்சர் இந்தியில் எழுதிய கடிதத்தை தன்னால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், இதனால் தான் ஒடியா மொழியில் பதில் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாநில மொழியில் கடிதங்களை அனுப்ப ,மத்திய அரசு மாநிலத்திற்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை வேலைக்கு அமர்த்தலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடியின் புதிய இந்தியா திட்டம் தொடர்பான மத்திய அரசின் விழாவில் கலந்துகொள்ள வருமாறு மத்தியஅமைச்சர் தோமர் அந்த ஒடிசா எம்.பி.க்கு இந்தி மொழியில் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.