Asianet News TamilAsianet News Tamil

100 நாள் வேலை.. ஏழைகளின் தொகை ரூ.3,000 கோடி பாக்கி வைக்கலாமா? இது மனித உரிமை மீறல்.. ராமதாஸ்.!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணிகளை செய்பவர்கள் பணம் படைத்தவர்கள் அல்ல. வேறு வாழ்வாதாரம் இல்லாத மக்கள் தான் இந்தத் திட்டத்தின்படி வழங்கப்படும் வேலைகளை செய்கின்றனர். அதன் மூலம் கிடைக்கும் ஊதியம் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரிய  உதவியாக உள்ளது. அந்த ஊதியத்தைக் கூட வழங்காமல் நிலுவை வைப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.

Central government should immediately pay 100-day salary arrears of workers in Tamil Nadu.. Ramadoss tvk
Author
First Published Nov 9, 2023, 11:36 AM IST | Last Updated Nov 9, 2023, 11:36 AM IST

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகளுக்கான ஊதிய பாக்கியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொண்ட பணிகளுக்காக கிராமப்புற ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில், இதுவரை சுமார் ரூ.3000 கோடியை  மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. தீபஒளி உள்ளிட்ட திருநாள்களை கொண்டாட பணம் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலையில், நிதி வழங்குவதை மத்திய அரசு தாமதிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி, நடப்பு நிதியாண்டில், தமிழ்நாட்டில் 28 கோடி மனிதநாட்கள் மட்டுமே வேலை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்க வேண்டிய தேவையையும், ஊரகப் பகுதிகளில் உள்ள சமூக கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டிய தேவைகளை கருத்தில் கொண்டும் நவம்பர் 8ஆம் நாளான நேற்று வரை 32.62 கோடி மனித நாட்கள் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இது இன்று வரை மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வேலை நாட்களை விட 117 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆனால், மத்திய அரசு அனுமதித்த வேலை நாட்களுக்கு உள்ள ஊதியம் கூட இன்னும் வழங்கப்பட வில்லை. ஊதிய நிலுவைத் தொகையாக மத்திய அரசு இன்னும் சுமார் 3,000 கோடி வழங்க வேண்டியுள்ளது.  மாநில அரசு அதன் பங்கை முழுமையாக வழங்கிவிட்ட நிலையில், மத்திய அரசு அதன் பங்கை இன்னும்  வழங்கவில்லை என்பதால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி செய்த ஏழைகளுக்கு  கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக  8  முதல் 15 நாட்களுக்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதனால், கிராமப்புற மக்களின்  வாழ்வாதாரம் கடுமையாக முடங்கியிருப்பதுடன், ஊரக பொருளாதாரமும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணிகளை செய்பவர்கள் பணம் படைத்தவர்கள் அல்ல. வேறு வாழ்வாதாரம் இல்லாத மக்கள் தான் இந்தத் திட்டத்தின்படி வழங்கப்படும் வேலைகளை செய்கின்றனர். அதன் மூலம் கிடைக்கும் ஊதியம் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரிய  உதவியாக உள்ளது. அந்த ஊதியத்தைக் கூட வழங்காமல் நிலுவை வைப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.

நடப்பாண்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை பெற்றவர்களில், 28 விழுக்காட்டினர் பட்டியல் சமுதாயத்தினர்; 1.47 விழுக்காட்டினர் பழங்குடியினர். இதையும் கடந்து பணி செய்பவர்களில் 87 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். வேலை உறுதித் திட்டத்தின்படி வழங்கப்படும் வேலைக்காக தரப் படும் ஊதியம் தான் லட்சக்கணக்கான குடும்பங்களின் பசியைப் போக்குகிறது என்பதை இந்த புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. இதை உணர்ந்தும், உழைப்பவர்களுக்கான ஊதியத்தை அவர்களின் வியர்வை காயும் முன் வழங்கி விட வேண்டும் என்ற தத்துவத்தின்படியும் அவர்களுக்கான ஊதியம்  உடனுக்குடன் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 3 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசு பாக்கி வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி பணி செய்பவர்களுக்கு உடனடியாக  ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசால் முடியும். ஆனால், திட்டமிட்டே, இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை குறைத்தது தான் இன்றைய நிலைக்கு காரணம் ஆகும். 2022-23ஆம்  ஆண்டில் இந்தத் திட்டத்திற்கு ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இந்த ஒதுக்கீடு குறைந்தது ரூ.80,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக நடப்பாண்டில்  ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டது. கடந்த காலங்களில்  வேலை உறுதித் திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால், இம்முறை அவ்வாறு எந்த கூடுதல் நிதியும் ஒதுக்கீடு  செய்யப்படாதது தான் ஏழை மக்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் 66.66 லட்சம் குடும்பங்கள் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு பெறுகின்றன. இது தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதம் மூன்றில் ஒரு பங்கு மக்களை பாதிக்கும் என்பதால்,  வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்ததற்காக ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,000 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios