காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி வழங்க முடியாது என்று மத்திய அரசு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. அணை கட்ட வசதியாக சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த சுற்றுச்சூழல் தொழில்நுட்ப கமிட்டியிடம் கர் நாடக அரசு விண்ணப்பித்திருந்தது. இதற்கு தமிழக அரசும் தமிழக எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு கிளம்பின. கர்நாடகாவில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள நிலையிலும் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையிலும், ஆய்வு நடத்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


மேலும் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளிக்கும்படியும் கோரினார். ஆனால், ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் விண்ணப்பத்தில் அணைக்கான மாற்று இடத்தை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டும் அனுமதி மறுப்புக்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
காவிரி விவகாரத்தில் தமிழகம் - கர்நாடகா இடையே சுமூக தீர்வு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்படும் எனவும் அந்த அனுமதி மறுப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.