காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிக்க குழு அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நிதி பெறப்பட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் புகார் கூறினார். இந்நிலையில் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகியவற்றில்  சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டம், வருமானவரிச் சட்டம், அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றை மீறிச் செயல்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக உத்தரவிட்டது.


இந்த குழுவுக்கு அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 அறக்கட்டளைகள் சார்பில் பெறப்பட்ட நன்கொடைகளில் சட்ட விதிமீறல்கள் உள்ளனவா என்பது குறித்து இந்தக் குழு விசாரிக்கும். ஆனால், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.