காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம், இறுதி தீர்ப்பில் தெரிவித்தது. ஆனால் தீர்ப்பு வந்து 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், தமிழக விவசாயிகளும் அரசும் அரசியல் கட்சியினரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் மேடையில் வைத்தே முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைக்க, அதற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. அதேபோல், தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் நம்பிக்கையான வார்த்தைகளை கூறவில்லை. அது தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இதுதொடர்பாக கோரிக்கை வைக்க தமிழக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு, பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்காததால், அதுவும் பெரிய பேசுபொருளானது.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியபோது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் முடங்கியதோடு, நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 9ம் தேதி இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 

மத்திய அரசின் இந்த அழைப்பின்மூலம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.