உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், வழிமுறைகள் குறித்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.

நூற்றாண்டை கடந்து தொடர்ந்து வந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. நடுவர் மன்றம் தமிழகத்திற்கு ஒதுக்கிய நீரின் அளவை உச்சநீதிமன்றம் குறைத்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பளித்தது. இது தமிழக விவசாயிகளிடையேயும் அரசு மற்றும் அரசியல் கட்சிகளிடையேயும் வரவேற்பை பெற்றது.

6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமரிடம் அளிக்க தமிழக அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் நேரம் ஒதுக்காததால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுவருவதோடு, நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர்.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விவாதிக்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 

மத்திய அரசு நடத்தும் இந்த ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் எஸ்.ஆர்.பிரபாகர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், வழிமுறைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

தமிழக மக்கள் மற்றும் அரசின் நீண்டகால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? எப்போது அமைக்கப்படும்? என்பது குறித்து இன்று தெரிந்துவிடும்.