எந்த காலத்திலும் வகுப்பறைகளில் செல்போனுக்கு அனுமதி கிடையாது. அதை மீறி, மாணவர்கள் செல்போன்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். அப்படி பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் திருப்பி தரப்பட மாட்டாது என்பதை ஏற்கனவே அழுத்தம் திருத்தமாக அறிவித்து இருக்கிறோம்.
மாணவர்கள் பள்ளிக்கு எடுத்து வரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திரும்ப தரப்பட மாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி;- எந்த காலத்திலும் வகுப்பறைகளில் செல்போனுக்கு அனுமதி கிடையாது. அதை மீறி, மாணவர்கள் செல்போன்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். அப்படி பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் திருப்பி தரப்பட மாட்டாது என்பதை ஏற்கனவே அழுத்தம் திருத்தமாக அறிவித்து இருக்கிறோம். அப்படி மீறி எடுத்து வந்தால் கண்டிப்பாக அதனை பறிமுதல் செய்வோம்.

சுமார் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டதால், மாணவர்களின் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தவே, முதல் ஐந்து நாட்களுக்கு பாடங்கள் எடுக்கப்படாது. குறிப்பாக 11,12ம் வகுப்புகளுக்கு முதல் 5 நாட்களுக்கு என்.ஜி.ஓ, காவல்துறை அதிகாரிகள் போன்றவர்கள் சிறப்பு வகுப்பு எடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

நீட் தேர்வை பொறுத்தவரை தொடர்ந்து நாம் சட்டபூர்வமாக அழுத்தத்தைக் கொடுத்து வருகிறோம். இதன் காரணமாக தான் நம் ஆளுநர், குடியரசுத் தலைவர் அவர்களுக்கு சட்டபேரவை தீர்மானங்களை அனுப்பி வைத்துள்ளார். கண்டிப்பாக இதில் தமிழக முதல்வர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
