மீம்ஸ்களால் ஆனது தமிழக அரசியல்! செத்தாலும், வென்றாலும், பதவி கிடைத்தாலும், பதவி பறிபோனாலும் ...என அரசியலின் எல்லா நிகழ்வுகளையுமே மீம்ஸ்கள் வழியேதான் தமிழகம் நோக்கிக் கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இருவரையும் ஒரு சேர சாய்த்தெடுத்திருக்கிறது ஒரு மீம்ஸ். அது...
‘அதிமுக-வுக்கு எதிரி TTV திமு.க-வுக்கு எதிரி CCTV ’ என்பதுதான்.  யதார்த்தத்தை பிரதிபலிக்கும் நய்யாண்டி சொல்லாடல்தான் இது. ஆனால் இதை அப்படியே சிரித்துவிட்டு கடந்து சென்றுவிட முடியாது. சம்பந்தப்பட்ட கழகங்களின் தலைவர்கள் இதைப் பற்றி சிந்திக்கவும் வேண்டியது காலத்தின் அவசியம். 

அ.தி.மு.க.வுக்கு எதிரி டி.டி.வி. என்பதில் அத்தனை ஆழமிருக்கிறது. தமிழகத்தின் ஆட்சியை கையில் வைத்திருப்பதோடு, இந்த தேசத்தை ஆளும் அரசுக்கு கைக்கடக்கமான உதவியாளராகவும் இருக்கும் அ.தி.மு.க.வுக்கு எதிராக ஒரு தனி மனிதனாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் தினகரன். அம்மாம் பெரிய ஆளுங்கட்சியின் அசுர பலத்தை எதிர்த்து ஜஸ்ட் லைக் தட் ஆக ஆர்.கே.நகர் தேர்தலில் அவர் ஜெயித்தது, தமிழக அரசியலில் அசாதாரண சாதனை. முதல்வர் துவங்கி அ.தி.மு.க.வின் கடைசி வட்ட செயலாளர் வரை இன்று அஞ்சி நிற்பது இந்த தனி மனிதனை கண்டுதான். அதனால்தான் சதாசர்வ காலமும் அந்த ஒற்றை எதிரியை பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள். 

தினகரன் எனும் ஆளுமை, ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆகப்பெரிய நெருக்கடிதான். தினகரனுடன் சமரசம் செய்தோ அல்லது அவரை ஊழல்வாதி என இவர்கள் சுட்டிக் காட்டுவதால், அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவரை சட்டரீதியாகவோ முடக்க வேண்டும். இல்லையென்றால் அ.தி.மு.க. எதிர்காலம் கேள்விக்குறியல்ல, முற்றுப்புள்ளியே. 

அ.தி.மு.க.வை டி.டி.வி. கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் தி.மு.க.வின் தன்மானத்தை  துவைத்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது சி.சி.டி.வி. பிரியாணி கடை, மொபைல் கடை, அழகு நிலையம் என பல வகையான வர்த்தக மையங்களில் அக்கட்சியின் நிர்வாகிகள் நடத்தும் ஆக்ரோஷ ஆட்டங்கள் இன்ச் பை இன்ச் சி.சி.டி.வி.யால் பதிவு செய்யப்பட்டு, அசைக்க முடியாத ஆவணங்களாக வைரலாகின்றன. 

வர்த்தக இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் அட்டூழியம் செய்வதும், அதற்காக அதன் தலைவர் ஸ்டாலின் நேரிலோ அல்லது அறிக்கையிலோ அல்லது தூதுவரை விட்டோ வருத்தம் தெரிவிப்பது வாடிக்கையாகி போயிருக்கிறது. அழகிரி சிக்கலுக்கு நடுவில் இந்த சி.சி.டி.வி. சிக்கலை தீர்க்கவே தனி அணியை துவக்க வேண்டிய நிலையே வந்துவிடும் போல தி.மு.க.வில்.

இதில் நகைப்பதற்கு ஒன்றுமே இல்லை. இம்மாநிலத்தை பல முறை ஆண்ட, மீண்டும் ஆளத் துடிக்கிற பெருமைக்குரிய ஒரு மாபெரும் இயக்கம் இப்படி விஞ்ஞான வளர்ச்சியின் மூலமாக தோலுரிந்து துவம்சமாவதென்பது அசிங்க உச்சம். இதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் ஸ்டாலின்.  ஜெயலலிதா போல்  கட்சி நிர்வாகத்தில் சர்வாதிகாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஸ்டாலின், இப்போது அது கையிலிருக்கும் நிலையில் இந்த விஷயத்தில் என்ன செய்கிறார்!? என்பதை பொறுத்தே அவரது ஆளுமையானது கணக்கிடப்படும். 

ஹும்! இரு கழகங்களும் என்ன செய்யப்போகிறது! என கவனிப்போம்.