சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் குறி வைத்துள்ளது.

குட்கா முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை செங்குன்றத்தில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது வருமான வரித்துறைக்கு ஒரு டைரி கிடைத்தது.


அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சென்னை காவல் ஆணையர்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் தொடங்கி காவல்நிலைய ஆய்வாளர்கள் வரை மாதம் மாதம் கொடுக்கப்படும் லஞ்சம் குறித்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன. அதாவது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய இவர்களுக்கு மாதம் மாதம் மாதவராவ் லஞ்சம் கொடுத்து வந்தார்.

ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதே அந்த டைரியின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் ஆணையர்கள் ஜார்ஜ், ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறை பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரையை தமிழக அரசு கிடப்பில் போட்டது. இதனை தொடர்ந்து தி.மு.க உயர்நீதிமன்றம் சென்று குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது.

தற்போது மாதவராவை அழைத்து சி.பி.ஐ இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தமிழக உளவுத்துறைக்கு கூட தெரியாமல் மாதவராவை அழைத்து ரகசியமாக சி.பி.ஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரித்துள்ளனர். இந்த விசாரணையின் போது மாதவராவ் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ அதிகாரிகளையே திடுக்கிட வைக்கும் வகையில் இருந்துள்ளது.

மேலும் விசாரணை முடிந்த பிறகு தான் மாதவராவை சி.பி.ஐ கொத்திக் கொண்டு போன தகவல் தமிழக உளவுத்துறைக்கு தெரியவந்துள்ளது. இந்தநிலையில் மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விரைவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் காவல் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி விஜயபஸ்கரின் உதவியாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையின் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு ஆன்லைன் மூலமாக பணப்பறிமாற்றம் செய்யப்பட்டதை வருமானவரித்தறை கண்டுபிடித்துள்ளது. மேலும் விஜயபாஸ்கரின் தந்தை கல் குவாரியில் இருந்து ரூ.20 லட்சம் பணம் சிக்கியது. இந்த இரண்டுமே லஞ்சமாக கிடைத்தது என விசாரணையின் போது விஜயபாஸ்கரின் உதவியாளரும், விஜயபாஸ்கரின் தந்தையும் வருமானவரித்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அந்த வாக்குமூலத்தை இணைத்து வருமானவரித்தறை தமிழக தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் விஜயபாஸ்கர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் கிடப்பில் போடப்பட்டது போல் இந்த கடிதம் கிடப்பில் போடப்படாது, நடவடிக்கை உறுதி என்கிறது கோட்டை வட்டாரம்.