cbi filed a case against karnataka minister k.k.george
கர்நாடகாவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கணபதி என்பவர் கடந்த ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக அம்மாநில அமைச்சர் கே.கே.ஜார்ஜ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாஜகவினர் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்
கர்நாடக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.கே.கணபதி, கடந்த வருடம் ஜுலை 7-ந் தேதி மடிகேரி என்ற இடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
ஆனால், இந்த விசாரணையில் தனக்கு உடன்பாடு இல்லை என உயிரிழந்த துணைக் கண்காணிப்பாளரின் தந்தை எம்.கே.குஷலப்பா வருத்தம் தெரிவித்தார். மேலும் தனது மகன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மற்றும் உயரதிகாரிகளால் தனது மகன் துன்புறுத்தப்பட்டார் என்று கணபதியின் தந்தை குற்றஞ்சாட்டினார்.
இதனை மறுத்த கர்நாடக அரசு, அந்த மரணத்தில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தது. இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டது.
இந்நிலையில், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.கே.கணபதி மரணம் தொடர்பாக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், பெங்களூரு லோக்ஆயுக்தா ஐ.ஜி. ப்ரணவ் மோஹாந்தி, கர்நாடக புலனாய்வுத்துறை ஏ.டி.ஜி.பி. ஏ.எம்.பிரசாத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து அமைச்சர் கே.கே.ஜார்ஜ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கர்நாடகா பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
