2ஜி முறைகேடு வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சிபிஐ, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கை ஏழு ஆண்டுகளாக விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், முறைகேடு நடந்ததை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறிவிட்டதாக கூறி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுவித்தது.

இந்த தீர்ப்பை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். ஆனால், இதுவே இறுதி தீர்ப்பு இல்லை என்றும் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பிலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.