cauvery water issue pmk ramadoss twitter
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் வழக்கில் 4 மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.
காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் குறைந்தபட்ச தேவையாக காவிரியில் இருந்து 264 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது.. ஆனால், 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் அந்த தீப்பில் குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் காவிரியில் இருந்து 184.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.
