நீலகிரி
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆளும் அதிமுக சார்பில் இன்று நீலகிரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. 

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆளும் அதிமுக சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. காலை 8 முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடக்கிறது. 

இதேபோல வணிகர்கள் சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்படுகிறது. 

அதன்படி, நீலகிரி மாவட்டம், ஊட்டி ஏ.டி.சி. திடலில் அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. தலைமை வகிக்கிறார். 

முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, அண்ணா தொழிற்சங்க மாநில குழு பொறுப்பாளர் யு.ஆர்.கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க.வினர் பங்கேற்கின்றனர்.

இதேபோல நீலகிரி மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம், ஊட்டி அனைத்து வணிகர் சங்கம், நுகர்பொருள் வினியோகர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ சவர தொழிலாளர்கள் சங்கம் உள்பட அனைத்துச் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முகமது ஜாபர், "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும். இதற்கு மக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று அவர் கூறினார்.