Asianet News TamilAsianet News Tamil

உழவர்களின் பாதுகாவலன் முதல்வர் எடப்பாடி... ஆஹா ஓஹோனு ஏகத்துக்கும் சிஎம்-ஐ புகழ்ந்து தள்ளிய ராமதாஸ்..!

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம், விவசாயிகள் நலனில் தாம் அக்கறை கொண்டிருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்திருக்கிறார். தாம் ஒரு விவசாயி என்று தொடர்ந்து கூறிவரும் முதலமைச்சர், அது வார்த்தை அல்ல... வாழ்க்கை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.

cauvery delta districts safest agriculture zone edappapdi Announces...ramadoss Praise
Author
Tamil Nadu, First Published Feb 9, 2020, 4:15 PM IST

தாம் ஒரு விவசாயி என்று தொடர்ந்து கூறிவரும் முதலமைச்சர், அது வார்த்தை அல்ல... வாழ்க்கை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார் ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இதற்காக, சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பா.ம.க. சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன்.

cauvery delta districts safest agriculture zone edappapdi Announces...ramadoss Praise

சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி வைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண் வளர்ச்சிக்காகவும், உழவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் முதன்மையானவைதான் காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது; அங்கு இனி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்பவை ஆகும். இந்த அறிவிப்பின் மூலம், காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவது தடுக்கப்பட்டுள்ளது.

cauvery delta districts safest agriculture zone edappapdi Announces...ramadoss Praise

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம், விவசாயிகள் நலனில் தாம் அக்கறை கொண்டிருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்திருக்கிறார். தாம் ஒரு விவசாயி என்று தொடர்ந்து கூறிவரும் முதலமைச்சர், அது வார்த்தை அல்ல... வாழ்க்கை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார். காவிரி டெல்டாவில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருந்த நிலையில், அவற்றை முறியடிக்கும் வகையில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது முதல்வரின் அரசியல் துணிச்சலை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் அவர் உழவர்களின் பாதுகாவலனாக உயர்ந்திருக்கிறார். இதற்காக முதலமைச்சருக்கு காவிரி டெல்டா விவசாயிகள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி என்ற வகையில், நான் பெருமிதம் அடைகிறேன். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்த கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதியை பா.ம.க. வழங்கியிருந்தது. அதன் பின் பல்வேறு தருணங்களில் உழவர் அமைப்புகளை திரட்டி இந்தக் கோரிக்கையை பா.ம.க. வலியுறுத்தியது. இதற்காக பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஒகேனக்கல்லில் தொடங்கி, பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தார்.

cauvery delta districts safest agriculture zone edappapdi Announces...ramadoss Praise

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த 10 கோரிக்கைகளில் முதன்மையானது, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட உழவுத் தொழிலுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்பதுதான். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இவ்வாறாக, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பெரும் பங்காற்றியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்ததற்காக, முதலமைச்சருக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

cauvery delta districts safest agriculture zone edappapdi Announces...ramadoss Praise

காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அம்மாவட்ட விவசாயிகளுக்கு கிடைத்துள்ள நன்மைகள் ஏராளமானவை. இந்த அறிவிப்பின் மூலம் காவிரி பாசன மாவட்ட உழவர்களின் எதிர்காலத்தைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகியுள்ளன.-- காவிரி பாசன மாவட்ட உழவர்களின் எதிர்காலம் இனி ஒளிமயமாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios