காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில் கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம் கூறி வருகின்றனர்.

மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.  கால அவகாசம் முடியும் வரை பொறுத்திருப்போம் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து
தமிழக அரசு சார்பில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,  காவிரி விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய  நியாயமான  தீர்வாக இருக்க முடியும்.  நீதி நிலைநாட்டப்படும் என  நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார். ரஜினியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வரவேற்றுள்ளனர். ஆனால், கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமையக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறி வந்த நிலையில், ரஜினியின் இந்த கருத்து, கர்நாடக அரசியல வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பலைகளை எழுப்பி வருகிறது.

ரஜினியின் இந்த கருத்து குறித்து பெங்களூருவில் உள்ள கன்னட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, ரஜினி அரசியல் செய்கிறார். அவர் தமிழகத்தில் புதுக்கட்சி தொடங்க ஏற்பாடு செய்து வருகிறார். அது அவர் இஷ்டம். அதற்காக எங்கள் வயிற்றில் அடிப்பது போன்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கக் கூடாது. அவர் நடித்த படங்கள்
கர்நாடகாவில் பல தியேட்டகளில் ஓடுகின்றன. அவருக்கு இங்கே ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். தமிழர்கள் வாழும் பகுதியில் ரஜினியின் கட் அவுட்டுகள் நிறைய இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்தின் கிளை கர்நாடகாவிலும் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரின் கருத்து கர்நாடக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றார்.

சந்தனக் கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை கடத்தி காட்டில் பிணையக் கைதியாக வைத்திருந்தபோது, ரஜினி தலையிட்டு ராஜ்குமாரை மீட்க உதவினார். இரு மாநில மக்களிடையே மோதல் உருவாகமல் தடுக்க காரணமாக இருந்தார். அவர் இப்போது கர்நாடக மக்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்திருப்பதை வன்மையாக
கண்டிக்கிறோம் என்று அவர் கூறினார்.