தமிழகத்தில் சிறிதளவு இருக்கின்ற வாக்குவங்கியும் பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கு இந்த செயல்பாடுகள் வழிவகுக்கும் என ஈஸ்வரன் காட்டாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கொரோனா பாதிப்பால் தமிழகம் தடுமாறி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சாதி அரசியலை கையில் எடுத்திருக்கின்ற பாஜக தமிழ் மாநில தலைவர் முருகன் அவர்களை கண்டிக்கிறோம். குறிப்பிட்ட சில சமூக பிரிவுகளை ஒன்றிணைத்து பொதுவான ஒரு பெயரை கொடுப்பதற்கு பாஜக தமிழக தலைவர் முயற்சிக்கிறார் என்பது அவருடைய பத்திரிக்கை செய்தியில் இருந்து தெரிகிறது. இந்த பிரச்சனை சில ஆண்டுகளாக தமிழகத்தில் பேசப்பட்டு வருவதும் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதும் எல்லோரும் அறிந்ததே.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்காமல் ஒரு சமூகத்திற்கு புது பெயர் வைக்க மத்தியிலே ஆள்கின்ற கட்சியினுடைய தமிழக தலைவர் முயற்சிப்பது பல்வேறு சாதி கலவரங்களை தமிழகத்தில் உருவாக்கும். அதன் மூலம் அரசியல் லாபத்தை அடைய பாஜக முயற்சித்தால் சொந்தக் காசில் சூனியம் வைத்து கொள்வது போல் ஆகும். குறிப்பிடப்படுகின்ற சமூக பிரிவுகள் இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு மாற்றப்படுகின்ற நிலைமையும் ஏற்படும்.

அந்த சமூகங்களை சார்ந்த ஒரு சிலர் இந்த கோரிக்கை வைக்கிறார்கள் என்பதற்காக அந்த சமூகத்தை சார்ந்த அனைவருடைய கருத்துக்களையும் கேட்காமல் வாக்குவங்கிக்காக இதை செய்தால் அவர்களுக்குள்ளேயே கலவரங்கள் வெடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. உண்மையான சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தமிழக பாஜக தலைவர் களம் இறங்கியிருப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாக போகும். தமிழகத்தில் சிறிதளவு இருக்கின்ற வாக்குவங்கியும் பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கு இந்த செயல்பாடுகள் வழிவகுக்கும். நாட்டை ஆள்கின்ற ஒரு தேசிய கட்சியினுடைய தலைவர் தமிழ் மண்ணில் சாதி கலவரங்கள் வரக்கூடாது என்று விரும்பினால் தன்னுடைய கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.