தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொருளாளராக இருப்பவர் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. இவர் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். 

அப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா, தாடிக்கொம்பு பகுதியில் தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பிரேமலதா உட்பட 4 பேர் மீது காவல்துறை சார்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேர்தல் விதிமீறல் வழக்கு திண்டுக்கல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வழக்கை முழுவதுமாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் பிரேமலதா உள்ளிட்ட தேமுதிகவினர் 4 பேர் சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் பிரேமலதா உள்ளிட்ட 4 தேமுதிகவினர் மீது நிலுவையில் இருக்கும் தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டிருக்கிறார். வெகுநாட்களாக நடைபெற்று வந்த தேர்தல் சம்பந்தமான வழக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதால் பிரேமலதா விஜயகாந்த் உற்சாகம் அடைந்திருக்கிறார்.