அடுத்து வசமாக சிக்கப்போகும் பெண் முன்னாள் அமைச்சர்.. வழக்குப்பதிவு செய்து அதிரடி காட்டும் போலீஸ்..!
சேலம் மாவட்டம் சங்ககிரிபகுதியை சேர்ந்தவர் டாக்டர் சரோஜா. அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் வீடு கட்டி வசித்து வருகிறார்.
வேலை வாங்கித் தருவதாக ரூ.76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரிபகுதியை சேர்ந்தவர் டாக்டர் சரோஜா. அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராசிபுரம் பகுதியில் புதுப்பாளையம் சாலையில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அமைச்சராக இருந்த போதே சரோஜா மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருந்து வந்தன.
இந்நிலையில், அவரது உறவினர் குணசீலன் முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக ராசிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தரக்கோரி 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர். இந்த தொகையை முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன்.
எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். இதனால், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனது நிலைமை விளக்கி கூறிய போது நாங்கள் அமைச்சரிடம் கொடுக்கவில்லை, உங்களிடம் தான் கொடுத்தோம். எனவே பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுப்பேன் என மிரட்டுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் சரோஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராகவும் முறைகேடு புகார்கள் தொடர்ந்ததையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கே.வி.வீரமணி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.