Asianet News TamilAsianet News Tamil

ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு

case registered against vairamuthu in three sections
case registered against vairamuthu in three sections
Author
First Published Jan 13, 2018, 3:20 PM IST


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புப் பேச்சாளராகப் பேசிய கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் புகழ் சேர்க்கும் ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசினார். இதனால் அந்த ஊர் மக்கள் கொந்தளித்தனர். இந்நிலையில், தங்கள் மத உணர்வைப் புண்படுத்தியதாகக் கூறி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வைரமுத்து மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து நாளிதழ் ஒன்றில் தமிழை ஆண்டாள் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஆண்டாள் பற்றிக் கூறிய கருத்துக்களால் தமிழகம் முழுதும் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இந்து முன்னணி நகரத் தலைவர் சூரி, கவிஞர் வைரமுத்து மீது புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கவிஞர் வைரமுத்து மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 153Aஇன்படி உள்நோக்கத்துடன் தன் பேச்சாலோ எழுத்தாலோ மதம் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே பகையை மூட்டியது அல்லது பொதுஅமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டது ஆகிய பிரிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டால் மூன்றாண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 

அடுத்து பிரிவு 295A இன்படி தனது பேச்சாலோ எழுத்தாலோ இந்து மதத்தினரின் உணர்வைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டால் 4 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 

அடுத்து பிரிவு 505 (1)இன்படி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கட்டுரையை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்நிலையில், சென்னையிலும் கவிஞர் வைரமுத்து மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கொளத்தூர், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் 153, 295 A, 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios