நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல பீகாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதனையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைத்தேர்தல்கள் செப்டம்பர் 7 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் கொரோனா காலத்தில் தேர்தலை பாதுகாப்பாக  நடத்துவது, எப்படி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது போன்ற விவரங்களை ஆலோசனைகளாக வழங்கும்படி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதேபோல மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்கப்பட்டது.  இதுதொடர்பாக பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இதனால், கொரோனா காலத்திலும் தேர்தல் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளனது. இதற்கிடையே கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது சரியல்ல என்றும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில், பீகாரில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பிறகு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில், ‘அதுவரை சட்டப்பேரவை தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.