ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, ஓட்டல் ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரின் குடும்பத்தினர் மீது அமலாக்கப்பிரிவினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்ந்துள்ளனர்.

லாலு பிரசாத் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது, இது தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. அமைப்பு விசாரணை நடத்தி வரும் நிலையில், இப்போது, அமலாக்கப்பிரிவும் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரெயில்வேஅமைச்சராக இருந்த லாலு பிரசாத்,  ஐ.ஆர்.சி.டி.சி. க்கு சொந்தமான 2 ஓட்டல்களை பராமரிக்க ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்தார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து கையூட்டாக பாட்னாவில் முக்கிய இடத்தில் ஒரு நிலத்தைப் பெற்றதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டுகிறது.

இதை தொடர்பாக கடந்த 5 ந்தேதி லாலு பிரசாத் மற்றும் குடும்பத்தினர் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர்.

இதற்கிடையே போலி நிறுவனங்கள் மூலம் லாலு பிரசாத் யாதவ் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளாரா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி, அவரின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் லாலு மற்றும் அவர்களின் குடும்பத்தார் தவிர்த்து, விஜய் கோச்சார், வினய் கோச்சார், டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனம், ஐ.ஆர்.சி.டி.சி. மேலாண் இயக்குநர் பி.கே.கோயல் ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.