அன்னிய செலாவணி மோசடி  வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் டி.டி.வி.தினகரனுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என  
சென்னையை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் 1994-95-ம் ஆண்டுகளில் அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம், 1972ன் பிரிவுகள் 8, 9, மற்றும் 14 ஆகியவற்றை மீறும் வகையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி அன்னிய செலாவணியை பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளின் கணக்குகள் வழியாக அன்னிய செலாவணியை வழங்க அங்கீகாரம் பெறாதவர்களிடம் இருந்து பெரும் தொகையை தினகரன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  தினகரனுக்கு  .31 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும் இதுதொடர்பான வழக்கு இன்னும் கீழ்க்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியும் என்று கூறுவது அன்னிய செலாவணி சட்டத்தின் நோக்கத்தை தோல்வி அடையச்செய்யும். 

இது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கவேண்டிய முடிவாகும். அன்னிய செலாவணி விதிமீறல்களுக்காக கோர்ட்டில் விசாரணை நிலுவையில் இருப்பதும் கிரிமினல் வழக்கில் ஒருவர் தண்டிக்கப்படுவதும் சமமாக நடத்தப்பட வேண்டும்.

இதனை கருத்தில் கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.