பேரூராட்சி வார்டுகளில் 57.58 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதிமுக 15.82 சதவீத வாக்கை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4.83 சதவீத வாக்குகளையும், பாஜக 3.02 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
தமிழகத்தில் பேரூராட்சிகளில் திமுக முதலிடத்தைப் பிடித்த நிலையில் பாஜக நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 489 பேரூராட்சிகளில் உள்ள 7621 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கத்திலிருந்தே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று வந்தன. பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் 196 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். ஓரிடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவே இல்லை. தவிர12 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 4 இடங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இரவு 7.30 மணி அளவில் வெளியிடப்பட்ட தேர்தல் ஆணைய அறிவிப்பில் 7603 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பணிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. பேரூராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையில் திமுகவே முதலிடம் பிடித்திருக்கிறது. திமுகவைத் தொடர்ந்து அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 7621 வார்டுகளில் திமுக சார்பில் 4388 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல 1206 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 368 பேரும், பாஜகவைச் சேர்ந்த 230 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இக்கட்சிகளைத் தவிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 26 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 101 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். தனித்து போட்டியிட்ட தேமுதிகவைச் சேர்ந்த 23 வேட்பாளர்கள் பல்வேறு பேரூராட்சிகளின் வார்டுகளில் வெற்ரி பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் திமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அக்கட்சி பேரூராட்சி வார்டுகளில் 57.58 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதிமுக 15.82 சதவீத வாக்கை மட்டுமே பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4.83 சதவீத வாக்குகளையும், பாஜக 3.02 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1.33 சதவீத வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.34 சதவீதமும், தேமுதிக 0.30 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதில் திமுகவும் காங்கிரஸும் ஒரே கூட்டணியில் போட்டியிட்டதால், அதை ஒரே கூட்டணி என்ற அடிப்படையில் அணுகலாம். அந்த வகையில் மூன்றாவது இடத்தை பாஜக பிடித்திருக்கிறது என்றும் கருதலாம். தனித்து போட்டியிட்ட கட்சிகளில் பாஜக மட்டுமே 3 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் அந்த அளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை.
