புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் (70) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். இந்நிலையில் புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி பாஜக கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. அப்போது, புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியது. இதையடுத்து இவ்விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை பாஜக நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் (70) இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.  இவரது திடீர் மறைவு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 3-லிருந்து 2ஆக குறைந்துள்ளது.