ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னரும் தே.மு.தி.க சார்பில் மாநில மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு நடத்தி கூட்டத்தை காட்டிய பிறகே கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடுகளை தே.மு.தி.க மேற்கொண்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடத்தினார் கேப்டன். மாநாடு முடிந்த சில நாட்களில் பா.ஜ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினார்.

இதே போல கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநாடு நடத்திய கேப்டன் பிறகு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். இந்த நிலையில் தே.மு.தி.க சார்பில் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே மாநாடு நடைபெறும் என்று அறிவித்து திருப்பூரில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. மாநாட்டிற்கு முன்னதாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்ப கேப்டன் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் எதிர்பார்த்தபடி உடல் நிலை முழுவதும் சீராகாத காரணத்தினால் திருப்பூர் மாநாட்டை தேதி குறிப்பிடாமல் தே.மு.தி.க ஒத்தி வைத்தது. பின்னர் கேப்டன் அமெரிக்காவில் இருந்து திரும்பி தற்போது முழு ஓய்வில் உள்ளார். கட்சியின் செயல்பாடுகளை கேப்டன் மனைவி பிரேமலதா கவனித்து வருகிறார். இந்த நிலையில் வரும் மார்ச் மாசம் மாநில மாநாட்டை நடத்த பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.

இதற்கான சுவர் விளம்பரங்களை தற்போதே தே.மு.தி.கவினர் தொடங்கியுள்ளனர். சுவர் விளம்பரங்களில் பிரேமலதா மற்றும் விஜயகாந்திற்கு ஒரே அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் விரைவில் கேப்டன் சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல உள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் கேப்டன் பங்கேற்பாரா? என்பது தான் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.

ஏனென்றால் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு ஒன்று இரண்டு நிகழ்ச்சிகளில் கேப்டன் கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் கேப்டன் எதுவும் பேசவில்லை. ஆனால் மாநாட்டிற்கும் இப்படி கலந்து கொண்டு, கேப்டன் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று கருதுகிறார்கள். எனவே கேப்டன் உடல் நிலையை கருத்தில் கொண்டே மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.