சட்டமன்ற தேர்தலுக்கு இன்று 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போதே அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியுள்ளது.

தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பு என்கிற சடங்கு இருந்தாலும் வேட்பாளர்களை இப்போதே இறுதி செய்து பிரச்சாரத்தை முடுக்கிவிடும் அதிரடி வியூகம் விரைவில் அதிமுகவில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகம் இதுவரை காணாத சட்டப்பேரவை தேர்தலை அடுத்த ஆண்டு காண உள்ளது. ஆளுமைகள் யாரும் இல்லாத நிலையில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியை அடைந்தாலும் கூட இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றி திமுகவிற்கு கள யதார்த்தை உணர்த்தியிருக்கும்.

இதே போல் அதிமுகவும் கூட களப்பணி சரியாக இருந்தால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்கிற உண்மையை உணர்ந்தே வைத்துள்ளது. அந்த வகையில் களப்பணியை தற்போதே தொடங்கினால் வெற்றி எளிதாகும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வழங்கியது போல் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை வாரி வழங்குவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளார். அந்த சமயத்தில் கூட்டணி கட்சிகளால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க தற்போதே வேட்பாளரை தேர்வு செய்து களப்பணியை ஆரம்பிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதா பாணியில் தற்போதே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து தற்போது முதலே அவர்களுக்கு பிரச்சாரத்தை முன்னெடுப்பது என்பது தான் எடப்பாடியின் பலே திட்டம். முதற்கட்டமாக தற்போது எம்எல்ஏக்களாக உள்ளவர்களில் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளவர்கள், வாய்ப்பு இல்லாதவர்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகளில் தோற்றவர்களை கணக்கெடுக்கும் பணிகளும் நடைபெறுகிறது.

இதுமட்டும் அல்லாமல் அதிமுகவிற்கு எப்போதும் சாதகமாக இருக்க கூடிய தொகுதிகள் அங்குள்ள சிறந்த வேட்பாளர்களையும் இரவு பகல் பாராமல் தேடிப்பிடிக்கும் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து, உத்தேச வேட்பாளர் பட்டியலை உருவாக்கும் டார்கெட் வைக்கப்பட்டுள்ளது. உத்தேச வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த வேட்பாளர்களுக்கான சமூக வலைதள பிரச்சாரங்களை முன்னெடுக்கும் பணிகளுக்கான வியூகமும் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தொகுதிவாரியாக இதற்கென டீம் ஏற்பாடு செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களிடம் நேரடியாக வேட்பாளர்களை தற்போது முதலே கொண்டு சேர்ப்பது தான் இந்த டீமின் வேலை. இதனை எடப்பாடி பழனிசாமியின் ஐடி விங் மேற்பார்வையிட்டு வருகிறது. இது தவிர தொகுதிவாரியாக உள்ள பிரச்சனைகளை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளை தற்போது முதலே செய்யத் தொடங்குவது இதற்கு காரணம் அதிமுக சார்பில் அடுத்த தேர்தலில் போட்டியிடும் இவர் தான் என்று பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்தாலும் தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகளுக்கு சுமார் 60 முதல் 70 தொகுதிகள் வரை ஒதுக்கவும் அதிமுக தயாராக உள்ளது என்றும் 2011 தேர்தலில் திமுக செய்த தவறைப்போல் அதிக தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்ககூடாது என்பதிலும் அதிமுக கவனமாக இருக்கும் என்கிறார்கள்.