தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான சிடி ரவி புதிய வியூகம் வகுத்து செயல்பட இருப்பது அதிமுகவை யோசிக்க வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி தொடர்பான பதற்றம் அதிமுக மற்றும் பாஜகவில் தெரிய ஆரம்பித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரை பாஜகவை எக்ஸ்ட்ரா லக்கேஜாகவே கருதுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட பாஜகவை தேவையில்லாம் நாம் தூக்கி சுமந்தோம் என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை கூறி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் பாஜக நம்முடன் கூட்டணிக்கு தேவையில்லை என்று வெளிப்படையாகவே அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

இதனை பாஜகவும் உணர்ந்தே வைத்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி என்பது தாமரை இலை தண்ணீர் போன்று ஒட்டியும் ஒட்டாமல் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். எனவே எந்த காரணத்தை வேண்டுமானாலும் கூறி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகலாம் என்கிறார்கள். எனவே அதற்கு ஏற்ப தேர்தல் வியுகத்தை வகுக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாமக, தேமுதிக என பல்வேறு கட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தனர். ஆனால் 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை அனைத்து கட்சிகளும் கழட்டிவிட்டன.

இதே போன்ற ஒரு சூழல் தான் தற்போதும் நிலவுகிறது. எனவே தான் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான சி.டி.ரவி புதிய வியூகத்துடன் களம் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள். கடந்த வாரம் சென்னை வந்த சி.டி. ரவி மூடிய அறைக்குள் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையை தொடர்ந்து சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 234 தொகுதிகளிலும் பாஜக கவனம் செலுத்துவதாகவும், அத்தனை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த பாஜக தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தான் பாஜகவின் சட்டமன்ற தேர்தல் வியூகம் என்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பது சிரமம் என்று கூறப்படுகிறது. எனவே தற்போது முதலே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜக ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதாக கூறுகிறார்கள். மாநில தலைவர் எல்.முருகனிடம் 234 தொகுதிகளுக்கும் தற்போதே வேட்பாளர்களை அடையாளம் காணுமாறு சிடி ரவி கூறிவிட்டு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அடுத்த முறை சி.டி ரவி வரும் போது, கூட்டணி தொடர்பாக ஒரு தெளிவு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

அதே சமயம் அதிமுக கூட்டணி என்கிற மனப்பான்மையில் இருக்க வேண்டாம் என்று சிடி ரவி முக்கிய நிர்வாகிகளிடம் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள். கூட்டணியை பொறுத்தவரை பாஜக தலைமையில் 3வது அணி அமைப்பதற்கான முயற்சியையும் மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளை சிடி ரவி கூறியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றாக உள்ள கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை பாஜக விரைவில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த முறையை போல அல்லாமல்இந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வென்றால் தான் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று பாஜக கணக்கு போடுகிறது.

தமிழகத்தை போலவே சீண்ட ஆள் இல்லாமல் இருந்த கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக தற்போது பலமான எதிர்கட்சியாகியுள்ளது. அதற்கு காரணம் அங்கெல்லாம் பாஜக தனித்து இயங்குவது தான். அதே பாணியில் தமிழகத்தில் கூட்டணியை தவிர்த்து தனியாக அரசியல் செய்தால் தான் முக்கிய கட்சியாக முடியும் என்பதை சிடி ரவி இங்குள்ள நிர்வாகிகளிடம் எடுத்துரைத்துள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் அதிமுக அல்லது திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கொடுப்பீர்கள் என்று பாஜகவால் காத்திருக்க முடியாது என்பதால் தனித்துஅல்லது தனிக்கூட்டணி தான் பாஜகவின் நிலைப்பாடாக இருக்கும் என்கிறார்கள்.