தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நீண்ட இழுபறிக்கு பிறகு 9தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. திருவள்ளூரில் ஜெயக்குமார், கிருஷ்ணகிரியில் செல்லக்குமார், கரூரில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், தேனியில் இளங்கோவன், விருது நகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் வசந்தகுமார், புதுச்சேரியில் வைத்தியலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.


சிவகங்கை தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஓரிறு தினங்களில் சிவகங்கைக்கு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குடும்பத்துக்கா திமுகவிடம் கேட்டு வாங்கப்பட்டது. கடந்த முறை போல கார்த்தி சிதம்பரத்துக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்குப் பதிலாக கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதிக்கு சிவகங்கையை வழங்க காங்கிரஸில் யோசிக்கப்பட்டது.
ஆனால், இறுதியில் கார்த்தி சிதம்பரத்துகே தொகுதியை வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருந்தது. ஆனால், சிவங்கங்கை தொகுதியைக் கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பனும் திடீரென களத்தில் குதித்தார். சிதம்பரத்துக்கு ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கொடுத்துவிட்டதால், அதே குடும்பத்துக்கு சிவகங்கை தொகுதியை வழங்க அவர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். சிவகங்கை தொகுதியைத் தனக்கு கேட்டும் பிடிவாதம் காட்டிவருகிறார்.
இதில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் போனதால்தான், காங்கிரஸ் மேலிடத்தால் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க முடியாமல் போனதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்திய பிறகே சிவகங்கையில் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் 26-ஆம் தேதி நிறைவுப்பெறுவதால் நாளைக்குள் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவங்கங்கை தொகுதி தொடர்பாக சிதம்பரத்துடன் இன்று அக்கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தி தீர்க்கமான முடிவை எடுக்கும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.