அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா (93). இவர் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, டிடிவி.தினகரன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்அடார் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவரும் உலகப் புகழ்பெற்ற புற்று நோய் நிபுணருமான மருத்துவர் சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். 

மருத்துவர் சாந்தா மறைவு மருத்துவத்துறைக்கும் , தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு. இந்த சூழலில், மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தன்னலமற்ற சேவையை கௌரவிக்க, சாந்தா புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவல்துறை மரியாதை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.