மாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-  

மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை  நீட் தேர்வின் மூலம் தகர்த்து வருகிறது மத்திய அரசு.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென  நாடு தழுவிய அளவில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தபோதும் மத்திய  பாஜக அரசு இதற்கு எதற்கும் செவி சாய்க்காமல் நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது, நீதிமன்றங்களும் அதற்கு ஆதரவாக தான் இருக்கின்றன.  இதன் விளைவாக, எத்தனையோ மாணவர்களும் மாணவிகளும் மருத்துவ கனவு தகர்ந்து  தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். கடந்த 8ம் தேதி, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

   

அதேபோல், நேற்று மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் இதுபோன்ற மாணவச் செல்வங்களின் உயிரிழப்புக்களை தடுக்க முடியும். உயிரிழந்த மாணவன் விக்னேஷ் குடும்பத்தினருக்கும், மாணவி ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி போராட வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட தற்கொலை போன்ற விபரீதமான முடிவுக்கு போக வேண்டாமென மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. 

கடந்த ஆறு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்று இருக்கிற சூழ்நிலையில், நாளுக்கு நாள்  நோய்த்தொற்று அதிகரித்து வருகிற நேரத்தில், நீட் தேர்வை நடத்துவது எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்கும், தேர்வு எழுதுகிற  மாணவர்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தினால் அவர்களின் தேர்வு பாதிக்கப்படுமே, அதனால் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகுமே என்பது பற்றியெல்லாம் எந்த கவலைப்படாமல், தேர்வை கட்டாயம் நடத்தியே தீர்வோம் என்ற மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்து. இதைக்கண்டும் காணாது இருக்கும் மாநில அரசின் நடவடிக்கையும் ஏற்புடையதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. 

எனவே, மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனவும், மாநில அரசு தனக்கு இருக்கக்கூடிய  வாய்ப்புகளை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது. உயிரிழந்த ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வற்புறுத்துகிறது.