"தமிழகத்தின் ஆளுநருடைய செயல்பாடு ஒட்டுமொத்தமாக தமிழ் நாடு என்கிற மாநிலத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது."
ரிஷிகள், சனாதனம் பற்றி பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய கருத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
மனு தர்மம் பற்றி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தின் ஆளுநருடைய செயல்பாடு ஒட்டுமொத்தமாக தமிழ் நாடு என்கிற மாநிலத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பிய 21 மசோதாக்களையும் ஊற வைத்து ஆளுநர் ஊறுகாய் போட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் செயல்பாட்டை முடக்குவதற்காகவே ஆளுநர் ஆர்எஸ்எஸ் அமைப்பால் இங்கு அனுப்பப்பட்டுள்ளார்.

ரிஷிகளையும், ஞானிகளையும் நம்பும் ஆளுநர் ஆர்.என். ரவி எதற்காக பீகாருக்கு விமானத்தில் செல்கிறார்? ஆளுநர் பேசிய கருத்துக்கள் எல்லாம் தொலைக்காட்சி எனும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம்தான் நாம் அறிந்து கொள்கிறோம். ஆளுநர் ஆர்.என். ரவியுடைய சனாதனம் பற்றிய கருத்து அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது. தமிழக ராஜ் பவன் ஆர்எஸ்எஸ் உடைய கூடாரமாக செயல்பட்டு வருகிறது. ரிஷிகள், சனாதனம் பற்றி பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய கருத்தைத் திரும்ப பெற வேண்டும். ஆளுநர் தன்னுடைய கருத்தை திரும்பப் பெற்று, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றால் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடைபெறும்.
மனு தர்மம் என்பதே ஆரியர்களால் உருவாக்கப்பட்ட நூல்தான். இதை இந்து பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நூலில் வர்ணாசிரமம், தீண்டாமையும்தான் எழுதப்பட்டுள்ளது'' என்று கி. வீரமணி தெரிவித்தார்.
