நவம்பர் 16-ம் தேதி பள்ளிகளைத் திறப்பது பற்றிய கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று அரசு அறிவித்தது. பள்ளிகளைத் திறக்கும் அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 12,000-க்கும் அதிகமான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில் காலை 8 மணி முதலாகவே கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 10 மணி முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு நேரில் வருகை தந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோர்களிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாணவரின் பெயர், வகுப்பு, பெற்றோர் பெயர், செல்போன் எண், கையெழுத்து, பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா? என்பன போன்ற விவரங்கள் அடங்கிய கருத்துக் கேட்பு படிவங்களை வழங்குகின்றனர். 

பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா? என்று கேட்கப்பட்டுள்ள இடங்களில் பெற்றோர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் டிக் செய்து கையெழுத்திட்டு படிவங்களை ஒப்படைத்து வருகின்றனர்.பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்கள், வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே, வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நேரில் வர இயலாத பெற்றோர்களிடம் கடிதம் வாயிலாகவும், மின்னஞ்சல், செல்போன் வாயிலாகவும் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றனர்.  பள்ளிகளில் நேரடியாக நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டம் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் தொகுக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இன்று மாலை அனுப்பி வைக்கப்பட உள்ளது. பெற்றோர்களின் கருத்துகள் அடிப்படையில் வரும் 16-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதா? தள்ளிவைப்பதா? என்பதை கல்வித்துறை முடிவு செய்ய உள்ளது.