தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாநகராட்சி பகுதியில் திமுகவினர் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். திமுக நடத்தி வரும் இதுபோன்ற கிராம சபை கூட்டத்தை கண்டு அதிமுக எதற்கு பயப்பட வேண்டும்? கிராமசபை கூட்டத்துக்கு ரூ. 300 வரை பணம் கொடுத்துதான் பொதுமக்களை அழைத்துவருகிறார்கள். மு.க. ஸ்டாலின் காலத்தில் இந்த பகுதியில் என்ன மாதிரியான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன என்பதை கூற முடியுமா? திமுக ஆட்சியில் மதுரையில் ரவுடிகள் தொல்லைதான் அதிகமாக இருந்தது.

 
தேர்தலின்போது மட்டும் மக்களைச் சந்திக்கும் கட்சி அல்ல அதிமுக. தற்போது தேர்தல் என்பதால் கிராமசபை கூட்டம் போடுகிறார்கள். காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வைத்து அதிமுக அரசை குறை பேசி வருகிறார்கள். திமுகவினர் 10 ஆண்டுகளில் பொதுமக்களை சந்தித்தார்களா? தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்ப்பது மக்கள் பணியே இல்லை. நாங்கள் மக்களுடன்தான் கூட்டணியே வைத்திருக்கிறோம். 
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் செல்வாக்கு உள்ளது என்றால் நேரடியாக ஒரு சவால் விடுகிறேன். தமிழகத்தில் உதயசூரியன் சின்னத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா? ஆனால், இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது, இழந்த சின்னத்தை மீண்டும் பெற்ற ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். இரட்டை இலை மக்களின் இதயக்கனி. 2021-ம் ஆண்டிலும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று அதிமுகவே ஆட்சி அமைக்கும்.” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.