துரைமுருகனின் மகனை யாராவது மிரட்ட முடியுமா? மிரட்டலுக்கு பயப்படுபவர்களா..!அவர்கள் அவதூறு பரப்புவதற்காக இப்படியெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள் என்று மதுரை விமானநிலையத்தில் கூலாக பதிலளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. லோக்சபாவில் பேசிய வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் உளவுத் துறை எனக் கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத இரண்டு பேர் என்னை  சந்தித்தனர். என்ன பிரச்சினை குறித்து லோக்சபாவில் பேசப்போகிறீர்கள்? என கேட்டனர் என சபாநாயகரிடம் புகார் கூறினார். மேலும் தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் அவர்கள் அத்துமீறி நுழைந்ததாகவும் புகார் கூறிய அவர், ஒரு எம்பிக்கே உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு நிலை என்ன? எனவும்  கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.

இந்த நிலையில் எம்பி கதிர் ஆனந்த் கூறிய புகார் குறித்து மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடியிடம்  நிருபர்கள் கேட்டனர்.. அதற்கு … அவர் யார்…துரைமுருகனின் மகன். அவரை யாராவது மிரட்ட முடியுமா? மிரட்டலுக்கு பயப்படுபவர்களா அவர்கள். அவதூறு பரப்புவதற்காக குற்றம்சாட்டுவார்கள்.. என கூலாக பதிலளித்தார்.