அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.  

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவின் விவரம் பின்வருமாறு:- 

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெற உள்ளது. பொதுவாக கழக அணி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் வாரிய தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொது குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அதிமுக தலைமையகத்தில் 14-6-2022 அன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் கழக இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் அழைக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்தபிறகு முன்னறிவிப்பு இல்லாமல் சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் சில தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக கழக தொண்டர்கள் இடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 18-6-2022 அன்று அதே தலைமை கழகத்தில் கட்சி தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இத்தகவலை அறிந்த உடன்பிறப்புகள் என்னை தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து.

பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்பது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு, இதுபோன்ற தருணத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் இருந்த போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எனவே தற்போது இடமில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் செயற்குழு கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது. கூட்டத்திற்கான பொருள் அஜெண்டா நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும், சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல அதிமுக தலைமை அலுவலகத்தில் 18ஆம் தேதி விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்து போய் உள்ளனர்.

கழகத்தினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழல் நிலவுகிறது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன். எனவே இவற்றை சுட்டிக்காட்டி 23 அன்று நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று அடுத்தகட்ட கூட்டத்திற்கான இடம் நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளராக இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்து இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்ட விதிகளுக்கு மாறாக சில சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் பெஞ்சமின் அவர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி விண்ணப்பித்துள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம் உள்ளது. எனவே 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என்று இணை ஒருங்கிணைப்பாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் திருமண மண்டபம்த்தின் மேலாளருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகிற அசாதாரண சூழ்நிலையில் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளபடியால் பென்ஜமின் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கழகத்துக்கு எதிராக நடவடிக்கை என்பதாலும், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டும் என தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.