முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஐ சந்திக்க அவரது வீடு தேடி வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் என்று தொண்டர்கள் உறுதியளித்துச் செல்கின்றனர். இதனால் ஓபிஎஸ் மகிந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்.
தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதையடுத்து ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
ஆனாலும் ஓபிஎஸ் வீடு உள்ள சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் அவரை சந்திக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் பதவி விலகியதையடுத்து தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அதே நேரத்தில் இக்கட்டான நேரத்தில் தனக்கு ஆதரவு அளித்த தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஓபிஎஸ் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் , மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நேரம் ஒதுக்கி தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
தொண்டர்களின் மனம் கோணாதபடி அவர்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கி உற்சாகத்துடன் அவர்களுடன் கலந்து பேசி அவர்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்ளையும் கனிவுடன் பெற்று வருகிறார்.

தொண்டர்களிடம் அக்கறையுடன் நலம் விசாரிப்பதோடு முதியவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவித்து வருகிறார்.
கிராமங்களில் இருந்து வரும் தொண்டர்களுடன் ஓபிஎஸ் ஆர்வத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்.தன்னை பார்க்க வரும் தொண்டர்களுக்கு எந்த வித சிரமமும் ஏற்பட கூடாது என்பதிலும் ஓபிஎஸ் மிகுந்த கவனத்துடன் உள்ளார்.
இதன் உச்சகட்டமாக தன்து வீட்டுக்கு வருவோர் பசியுடன் திரும்பி செல்லக்கூடாது என்பதால் மூன்று வேளையும் சுடச்சுட நல்ல உணவும் வழங்கி வருகிறார். இதனால் நெகிழ்ந்து போன தொண்டர்கள் ஓபிஎஸ் ஐ வாழ்த்திச் செல்கின்றனர்.
