நடிகர் ரஜினி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த களம் இறங்க வேண்டும் என்று வீதிக்கு வாங்க ரஜினி என்று கடந்த சில நாட்களாக ஒரு பெரிய அரசியல் கட்சி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் ரஜினிகாந்த் பத்து நாட்களுக்கு முன்னர் அதிரடியாக பேட்டி ஒன்றை அளித்தார். அதில், சிஏஏவிற்கு தான் ஆதரவு என்று வெளிப்படையாக அறிவித்தார் ரஜினி. மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேடும் அவசியம் என்று ரஜினி கூறியிருந்தார். இந்த இரண்டு விஷயங்களாலும் இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சனை என்றால் தான் முதல் ஆளாக களம் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றும் ரஜினி அறிவித்தார். ஆனால் அப்போது, முஸ்லீம்களுக்கு போராட்டம் நடத்த இவர் யார்? என்று அந்த கட்சியின் அபிமானிகள் தகவல்களை பரப்பினர்.

மேலும் சிஏஏ மற்றும் என்பிஆர் ஆதரவு மூலம் ரஜினி பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் தான் ஏன் சிஏஏ மற்றும் என்பிஆரை ஆதரிக்கிறேன் என்று ரஜினி விளக்கமாக சொல்லியிருந்தார். சிஏஏ என்பது இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை கணக்கெடுத்து வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் உள்நாட்டினரிடம் சென்று நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கெடுப்பது இல்லை என்பதையும் ரஜினி தெளிவதாக எடுத்துக் கூறியிருந்தார்.

இதே போல் ஒரு நாட்டில் மக்கள் தொகை எவ்வளவு என்று தெரிந்தால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் என்பிஆர் அவசியம் என்றும் ரஜினி விளக்கம் அளித்திருந்தார். அதே சமயம் சிஏஏவால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு உள்ளனரா என்பதை தெரிந்து கொள்ளவே சிஏஏ உதவும் என்று ரஜினி கூறியிருந்தார். இதனையும் மீறி சிஏஏவால் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு என்றால் தான் முதல் ஆளாக களம் இறங்குவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டு போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரும் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்களும் பாதிக்கப்பட்டனர். இதனை மையமாக வைத்து தான் ரஜினியை சீண்டி வருகிறது அந்த முக்கிய கட்சி. முஸ்லீம்களுக்கு பாதிப்பு என்றால் களம் இறங்குவதாக கூறிய ரஜினி தற்போது வீதிக்கு வந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று கடந்த நான்கு நாட்களாக அந்த கட்சியின் அபிமானிகள் வம்பு செய்து வருகிறார்கள்.

ரஜினி தான் களம் இறங்குவதாக கூறியது சிஏஏவால் பாதிப்பு ஏற்பட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டால் வீதிக்கு வருவதாக தான் கூறியிருந்தார். மாறாக அனுமதியின்று சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தி, போலீசாரை நோக்கி கற்களை வீசி, பெண்களை கேடயமாக நிறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையை ஒரு டெல்லி ஷாகீன் பாக்காக மாற்றும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ரஜினி எப்போதும் கூறியதில்லை என்கின்றனர் அவரின் ரசிகர் மன்றத்தினர்.

சிஏஏவால் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று ரஜினி கூறியதை நம்பி போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்குமா என்றும் அவரது ரசிகர்கள் வினவுகின்றனர். அனுமதியே இல்லாமல் போராட்டம் நடத்திவிட்டு தற்போது பிரச்சனை என்றதும் ரஜினி களம் இறங்க வேண்டும் என்றால் எப்படி? சிஏஏவால் எங்களை வெளியேற்றுகிறார்கள், இல்லை சிஏஏவுக்கு ஆதரவாக எங்களை போராடத் தூண்டுகிறார்கள் என்று முஸ்லீம்கள் கூறினால் அடுத்த நிமிடமே ரஜினி களம் இறங்குவார் என்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சி அரசியல் ரீதியாக பலன் அடைய சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில் நாட்டில் மதப்பிரச்சனையை ஏற்படுத்த நடைபெறும் முயற்சி குறித்து ரஜினி உரிய நேரத்தில் வாய் திறப்பார் என்றும் உறுதியுடன் சொல்கிறார்கள். அதனால் ரஜினி இப்போது வீதிக்கு வரமாட்டார்.