காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது.


தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டியில் 12 வேட்பாளர்களும் நாங்குநேரியில் 23 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். என்றாலும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக - திமுக இடையேயும், நாங்குநேரியில் அதிமுக - காங்கிரஸ் இடையேயும் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த ஒரு மாதமாக இரு தொகுதிகளையும் அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தார்கள்.


அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல அதிமுக  அமைச்சர்களும், திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், இரு கட்சிகளின் நிர்வாகிகள் என ஏராளமானோர் இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்துவந்தார்கள். கடந்த சனிக்கிழமையுடன் தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.


காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளும் நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளும் தேர்தல் அமைக்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 1,917 தேர்தல் பணியாளர்களும், நாங்குநேரியில் 1,460 தேர்தல் பணியாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தேர்தலையொட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. காலையிலே வாக்காளர்கள் காத்திருந்து வாக்குச்சாவடிகளில் வாக்களித்து தொடங்கியிருக்கிறார்கள்.
இதேபோல புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களிலும் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.