நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகள்வரை கேட்டு அதிமுகவை நெருக்கிவரும் பாஜக, சட்டப்பேரவைத் தொகுதியிலும் இரண்டு சீட்டுகள் கேட்டு அதிரடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 19 தொகுதிகள் அதிமுக வென்ற தொகுதிகள் ஆகும். இந்தத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் அதிமுக உள்ளது. 

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகள் வரை கேட்டு அதிமுகவை பாஜக நெருக்கிவருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை பாஜக தரப்பில் கேட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. 

2001-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. எனவே தங்களுடைய குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வசதியாக இந்த முறை அதிமுக உதவியுடன் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ஆளும் அதிமுகவை கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

பாஜகவோடு கூட்டணி அமைக்க அதிமுகவில் கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இடைத்தேர்தலிலும் போட்டியிட பாஜக விரும்புவது அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிகிறது. நாளை நடக்க உள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கேட்கும் தொகுதிகள், சட்டப்பேரவையில் போட்டியிட விரும்புவது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.