விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக சார்பில் கடந்த 22 மற்றும் 23-ம் ஆகிய இரண்டு நாட்கள் விருப்பமனு பெறப்பட்டது. இரண்டு தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 90 பேரும், புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதிக்கு 10 பேரும் விருப்பமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று முன்தினம் மாலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. 

இந்நிலையில், இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான காணை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியச் செயலாளராக முத்தமிழ்ச்செல்வன் உள்ளார். 1985 முதல் 1991-ம் ஆண்டு வரை கல்பட்டு ஊராட்சி தலைவராகவும் முத்தமிழ்ச்செல்வன் இருந்துள்ளார். திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக நாராயணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.