காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காகவே பாமக இழுத்த இழுப்புக்கெல்லாம் அதிமுக வளைந்துகொடுத்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்திவந்தது. நேற்று முன்தினம் வரை திமுகவோடு தொடர்பில் இருந்த பாமக, நேற்று காலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தொகுதி உடன்பாட்டையும் ஜரூராக முடித்துவிட்டது. அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளும், ஜூலையில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் என 8 இடங்களை பாமகவுக்கு ஒதுக்கியது அதிமுக. 

பாஜவைத் தாண்டி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் அதிமுக தரப்பில் பாமகவுக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பாமகவை வளைத்துப்போடுவதில் அதிமுக முனைப்பு காட்டியதற்கு 21 சட்டப்பேரவைத் இடைத்தேர்தலே முக்கிய காரணம் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகின்றன. தொகுதி உடன்பாடு முடிந்த கையுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக பலமாக உள்ள வட மாவட்டங்களில் மட்டும் திருப்போரூர், சோளிங்கர், பூந்தமல்லி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தொகுதிகளில் தினகரன் அணியால் ஓட்டுப் பிரிப்பு ஏற்பட்டாலும், பாமகவின் ஓட்டு வங்கி காப்பாற்றும் என்று அதிமுக போட்ட கணக்கே அந்தக் கட்சியை கூட்டணியில் இணைக்கக் காரணம் என்கின்றன அதிமுக வட்டார தகவல்கள். 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சோளிங்கர் 50,827; பூந்தமல்லி 15,827; ஓசூர் 10,309; பாப்பிரெட்டிப்பட்டி 61,521; குடியாத்தம் 7505; திருப்போரூர் 28,125 ஆகிய தொகுதிகளில் பாமக குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்றதை கணக்குப் போட்டுதான் பாமகவை தங்கள் பக்கம் அதிமுக இழுத்தது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் எஞ்சியுள்ள இரண்டு ஆண்டு கால ஆட்சியை எப்படியும் நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள அதிமுக, இடைத்தேர்தலில் 8 - 9 தொகுதிகளில் வென்றாக வேண்டிய கட்டயாத்தில் உள்ளது. 

இதேபோல ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக் எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பை அளிக்கும் எனத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட 6 தொகுதிகளில் பாமக ஓட்டு வங்கி அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில்தான் பாமக இழுத்த இழுப்புக்கெல்லாம் அதிமுக ஒத்துக்கொண்டது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.