பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கமானது மூன்றாவது நீதிபதியாலும் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், மேல்முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை எடுத்துவிட்டார் தினகரன். அரசியல் களம் அதகளப்பட துவங்கிவிட்டது. 

நமது ஏஸியாநெட் இணையதளம் நேற்றே குறிப்பிட்டிருந்தது போல் ‘எந்தெந்த தொகுதியில் யார் யார் எம்.எல்.ஏ.வாக இருந்தார்களோ அவர்களே அந்த தொகுதியின் வேட்பாளர்’ என்று தினகரன் அறிவித்துவிட்டார் என்றே தகவல். அந்த வகையில் நிலக்கோட்டை, பெரியகுளம், ஓட்டப்பிடாரம், ஆம்பூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி என பதினெட்டிலும் கதிர்காமு, செந்தில்பாலாஜி, பழனியப்பன் என அவரவர்களே வேட்பாளர் ஆகப்போகிறார்கள் என்றே அ.ம.மு.க. வட்டாரம் தகவலை உறுதிப்படுத்துகிறது. 

இந்நிலையில், இந்த பதினெட்டிலும் ஜெயித்தாக வேண்டும் என்பது கூட தினகரனின் இலக்கு இல்லை, அ.தி.மு.க.வை மூன்றாவது இடத்துக்கு தள்ள வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே இலக்காக இருக்கிறது என்கிறார்கள். ’வெற்றி நிச்சயம்’ என்று தினகரன் வட்டமிட்டு வைத்திருக்கும் தொகுதிகளில் அரவக்குறிச்சி முதலிடத்தில் இருக்கிறது என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி இது. கடந்த சட்டசபை தேர்தலின் போது ‘பணப்பட்டுவாடா’ பிரச்சனை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு பின் தேர்தல் நடந்த தொகுதி இது. 

ஆளும் அ.தி.மு.க. அரசு தன்னை பழி வாங்குவதற்காக தன் தொகுதிக்கு எந்த நல்லதையுமே பண்ணுவதில்லை! என குற்றம் சாட்டி செந்தில்பாலாஜி அடிக்கடி கொடுத்த பேட்டிகளும், அவர் உட்கார்ந்த உண்ணாவிரதங்களும் அவருக்கு நிச்சயமாக கை கொடுக்கின்றன. அனுதாப ஓட்டுக்கள் செந்திலுக்கு அள்ளித்தட்டும் என்கிறார்கள். அதேபோல் இந்த தொகுதி அடங்கும் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான தம்பிதுரை மற்றும் கரூர் எம்.எல்.ஏ.வும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் ஆகியோர் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பும் செந்திலுக்கு கை கொடுக்குமாம்.

  

தினகரனின் நம்பிக்கை இப்படியிருக்க, அ.தி.மு.க.வோ பத்தொன்பது தொகுதிகளில் தோற்றாலும் இதில் வென்றே ஆக வேண்டும்! என்று துடிக்கிறார்கள் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும். இரட்டை குழல் துப்பாக்கிகளான இருவரின் டார்கெட்டாகவும் செந்தில்பாலாஜிதான் மாறியுள்ளார். 

அதென்ன பத்தொன்பது தொகுதி? என்கிறீர்களா...அதாவது தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான பதினெட்டு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இறந்த வகையில் காலியான இரண்டு என்று இருபது தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு ரெடியாச்சே!