சர்வாதிகாரத்துடன் நடக்கும் மு.க.ஸ்டாலினுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்துள்ளனர் என அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இறுதி சுற்று வரை அதிமுக முன்னிலை இருந்த வந்தது. இறுதியில் அதிமுக வேட்பாளர் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், இடைத்தேர்தல் வெற்றிக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும், பித்தலாட்டம் பேசிய திமுகவிற்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. மக்களை முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தெளிவான தீர்ப்பைத் தந்திருக்கின்றனர்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. மக்களை உணர்ச்சிகரமாகத் தூண்டுகின்ற எந்த நிகழ்ச்சியும் இல்லை. எந்தவித குழப்பமும் இல்லாமல், 2021-ல் தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பதை இந்த வெற்றியின் மூலம் மக்கள் கூறியுள்ளனர். இந்த நாட்டை ஆளக்கூடிய சக்தி அதிமுகவுக்குத் தான் உண்டு என மக்கள் தெளிவாகச் அடித்து சொல்லியிருக்கின்றனர். ஜெயலலிதா வழியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் தீர்ப்பளித்திருக்கின்றனர்.