இடைத்தேர்தல் பணிகளில் அதிமுகவினர் காட்டும் தீவிரம் திமுகவினரை மூச்சு முட்ட வைக்கும் வகையில் இருப்பதாக கள நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் தனது கவுரவப் பிரச்சனையாக மாறியிருப்பதை எடப்பாடி நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார். வேலூரில் கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டாமல் போனதால் எடப்பாடி தரப்பு மிகப்பெரிய அப்செட்டில் இருந்தது. சசிகலா வேறு அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார்.

இந்த சூழலில் அதிமுகவில் தான் தான் மிகப்பெரிய சக்தி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு உள்ளது. அப்படி நிரூபிக்க வேண்டும் என்றால் இடைத்தேர்லில் வெற்றிவாகை சூட வேண்டும். அதற்கான வியூகம் சரியாக வகுக்கப்பட வேண்டும். வேலூர் தேர்தல் போன்று அல்லாமல் இந்த இரண்டு இடைத்தேர்தல் கள நிலவரத்தை நேரடியாக எடப்பாடியே மேற்பார்வையிடுகிறார்.

தேர்தல் பொறுப்பாளர்களான அமைச்சர்களிடம் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை பேசிவிடுகிறார். அமைச்சர்களின் பணிகள் சரியான திசையில் செல்கிறதா என்று உளவுத்துறையின் அறிக்கை மூன்று முறை எடப்பாடிக்கு கொடுக்கப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எவ்வித தங்கு தடையும் இன்றி விட்டமின் ப செல்வதை உறுதிப்படுத்தவும் தனி டீமே செயல்பட்டு வருகிறது.

பிரச்சாரம் தொடங்கி பூத் ஏஜென்ட்ஸ் வரை அனைவருக்கும் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு அதிகமாக விட்டமின் ப கொடுக்கப்பட்டு வருகிறது. பிரச்சாரத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வழக்கமாக ஒரு நாளைக்கு ரூ.200 கொடுக்கப்படும். மேலும் ஆண்கள் என்றால் கூடுதலாக குவாட்டரும் கோழி பிரியாணியும் உறுதி. இந்த முறை பெண்களுக்கு கலர் கலராக புடவை வாங்கி சப்ளை செய்யப்படுகிறது.

இதனால் திமுக கூட்டணி பிரச்சாரத்திற்கு வருவதை காட்டிலும் அதிமுக பிரச்சாரத்திற்கு செல்லவே தொகுதிவாசிகள் விரும்புகின்றனர். மேலும் தற்போதே பணம் வீடு வீடாக பாயத் தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். வேலூரைப் போல் தான் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவின் பணி இருக்கும் என்று எதிர்பார்த்த திமுகவினரை மூச்சு முட்ட வைக்கும் அளவிற்கு அதிமுக செய்யும் தேர்தல் வேலை உண்மையில் ரேஸில் திமுகவை பின்னால் தள்ளியுள்ளது.