திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்பு மனு தாக்கலின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசலிலேயே நிற்க வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று நான்கு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்புமனுத்தாக்கல் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து சென்னையில் இருந்து மதுரை சென்ற ஓபிஎஸ் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பிறகு திருப்பரங்குன்றம் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வேட்பாளர் முனியாண்டி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி பிரமுகர்கள் வருகை தந்தனர். 

ஆனால் தேர்தல் அலுவலகத்திற்குள் சென்று முனியாண்டி வேட்புமனு தாக்கல் செய்யும்போது அங்கு ஓ.பன்னீர்செல்வம் இல்லை. அவரை எங்கே என்று செய்தியாளர்கள் விசாரித்தபோது அலுவலகத்தில் வெளியில் அவர் என்று கொண்டிருந்தது தெரியவந்தது. வேட்புமனு தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளே வராமல் வெளியே நின்றது அதிமுக தொண்டர்களை கலக்கமடைய வைத்தது.

அப்போது கூட்டணி கட்சியினரும் உடன் வர வேண்டும் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் தாமாக ஒதுங்கி நின்று கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஆனால் உண்மையில் ராஜன் செல்லப்பா தான்தான் வேட்பாளர் உடன் செல்வேன் என்று அடம்பிடித்த காரணத்தினால்தான் ஓபிஎஸ் வெளியிலேயே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள்.