இடைத்தேர்தல் வாக்குப் பதிவுக்கு முதல் நாள் கூட்டணி கட்சியினரையும், தங்கள் கட்சி நிர்வாகிகளையும் அதிமுக தலைமை கவனித்தவிதம் தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று என்று பேசிக் கொள்கிறார்கள்.

தற்போது விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு திடீரென கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு என்று ஸ்வீட், பட்டாசுகளுடன் பேக்கேஜ் ஒன்று சென்றுள்ளது. அதனை திறந்து பார்த்தவர்கள் திக்குமுக்காடியுள்ளனர்.

காரணம் தங்களின் பொறுப்புகளுக்கு ஏற்ப விட்டமின் ப அந்த பேக்கேஜூக்குள் பல் இளித்துக் கொண்டு இருந்துள்ளது. இப்படி ஒரு கவனிப்பு இதுநாள் வரை தங்கள் கட்சியினரிடம் இருந்து கூட வந்தது இல்லை என்ற அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் புல்லரித்துப் போய் உள்ளனர். இதற்கிடையே அதிகாலையே எழுந்து அனைவரும் தேர்தல் பணியாற்ற ஓடி வந்துள்ளனர்.

காலை ஐந்து மணிவாக்கில் இரண்டு தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆஜராகியுள்ளனர். அதோடு மட்டும் அல்லாமல் வாக்காளர்களை அழைத்து வரும் பணியும் காலையிலேயே ஜரூராக நடைபெற்று வருகிறது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் இந்த திடீர் உற்சாகம் எதிர்தரப்பை நிலைகுழைய வைத்துள்ளது.

இதை எதிர்பார்த்து தான் தேர்தலுக்கு முதல் நாள் தீபாவளி கிஃப்ட் பேக் கொடுக்கப்பட்டதாம். அதோடு மட்டும் அல்லாமல் தேர்தலுக்கு முதல் நாள் மிக முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே இதே பாணி கவனிப்பு அதிமுகவில் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்த நடைமுறை தற்போது கிளை கழகச் செயலாளர்கள் வரை நீண்டுள்ளதால் இந்த தேர்தலில் அதன் பலன் நிச்சயமாக இருக்கும் என்று அதிமுக தலைமை நம்புகிறதாம்.