முரசொலி மூலப்பத்திரத்தையும், எனது இடப்பத்திரத்தையும் காட்டி யாருடைய இடம் முறையாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் தெரியப்படுத்தி விடலாம் வாருங்கள்’’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ஜெயப்ரதீப் சவால் விட்டுள்ளார். 

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், ‘’திமுகவின்  அதிகாரப்பூர்வமான முரசொலி நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அதாவது நான் திருப்பூரில் தொழில் செய்யும் இடம் ரூ.200 கோடி மதிப்பில் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். அதில் நான் வீடு கட்டி ரோபோக்களை வேலைக்கு வைத்திருப்பதாக அப்பட்டமான பொய்களை கூறியிருக்கிறார்கள். இந்த செய்தியைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இருக்கும் மாநிலத்தில் நாம் இருக்கிறோம் என்று எனக்கு கவலை ஏற்பட்டது.

அதற்கு நான் தகுந்த விளக்கத்தை கூற கடமைப்பட்டு இருக்கிறேன். இந்த நாள் வரை நான் வீடு கட்டும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டதில்லை. எந்த வீடுகளையும் விற்பனையும் செய்ததில்லை. நான் வீடே கட்டாதபோது அதையும் மீறி அதில் நான் வீடு கட்டி ரோபோக்களை வேலைக்கு வைத்திருப்பதாக கூறுவதும், அதற்கு ஒரே நாளில் வீட்டுவசதி துறையிடம் அனுமதி வாங்கினேன் என மிகப்பெரிய பொய்யை பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டு இருக்கிறீர்கள். இந்த செய்தியை பார்த்து சிரிப்பதா அல்லது வேதனைப்படுவதா? என்று தெரியவில்லை. நான் வீட்டு மனைகளாக பிரித்து மனைகளை சேர்ந்த இடங்களை மட்டுமே விற்பனை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது இடத்தின் மூலப்பத்திரம் முதற்கொண்டு அரசிடம் முறையாக பெற்றதற்கான அனைத்து சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு வருகிறேன். முரசொலி பத்திரிக்கை நடத்தும் அந்தப் பத்திரிகையின் கட்டடத்திற்கு எப்படி ஒப்புதல் வாங்கினீர்கள் என்பதை கூறுங்கள். யாருடைய இடம் முறையாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் தெரியப்படுத்தி விடுவோம். இதற்கு நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் இதற்கு தயாரா? கொரோனா ஊரடங்கு காரணத்தால் தொழில் செய்வது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஆகையால் எனக்கு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், மாத வங்கிக்கடன் செலுத்தவும் சிரமமாக இருக்கிறது.

நீங்கள் எனது இடத்தை ரூ.200 கோடி என்று நல்ல விலை நிர்ணயித்துள்ளீர்கள். ஆகையால் நான் அந்த இடத்தை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். தமிழகத்திலேயே முதல் பணக்காரர் ஆகிய உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறி எனது இடத்தை வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு கிரையம் செய்து கொடுத்துவிடுகிறேன். எனக்கு நீங்கள் நிர்ணயித்த 200 கோடி ரூபாய் வேண்டாம். 100 கோடி ரூபாய் தாருங்கள். அதுவும் இல்லையென்றால் ஒரு 50 கோடி ரூபாயாவது தாருங்கள். அந்த திருப்பூர் இடத்தை மட்டும் அல்ல. எனது சொத்து முழுவதையும் உங்களிடமே திரும்ப கொடுத்து விடுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.